சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த உறவினர்கள் ஜெகநாதன், இளவரசன் , மணிகண்டன். மூன்று பேரும், இரண்டு டாடா ஏஸ் வாகனம் மூலம் வெங்காயம், பூண்டு வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்களிடம் காட்டூர் வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.
அவர், கூலி அதிகமாக கேட்டதால் கந்தசாமியை வேலையை விட்டு 3 பேரும் நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று பேரையும் தாக்கியுள்ளார். இது குறித்து காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தனர்.
இந்நிலையில் ஞாயிற்று கிழமை இரவு ஜெகநாதன், இளவரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் கந்தசாமி கத்தியுடன் சென்று அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன ஜெகநாதன், இளவரசன் மற்றும் மணிகண்டன் குடும்பத்தினர் நேற்று(திங்கள்கிழமை)சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.