சேலம்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, வரும் 16ஆம் தேதி சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார் என்றத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'தமிழக தியாக தலைவி சின்னம்மா பேரவையின்' முதல் ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள பண்ணப்பட்டியில் இன்று (அக்.10) நடைபெற்றது. இந்த அமைப்பு சசிகலாவின் ஆதரவாளர்களால் சேலத்தில் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
18 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தக் கூட்டம், சின்னம்மா பேரவையின் நிறுவனத்தலைவர் சேலம் ஏ.கே. புல்லட் குமார் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அரசு, செயல் தலைவர் ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சேலம், திருப்பூர், நாமக்கல், மன்னார்குடி, விழுப்புரம், ஈரோடு, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சசிகலா அரசியல் பிரவேசத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் 'தமிழக தியாக தலைவி சின்னம்மா பேரவை' சசிகலாவிற்கு உறுதுணையாக இருந்து, அவர்களது அரசியல் பயணத்தில் துணை நிற்கும் என்றும் பேரவை நிறுவனர் ஏ.கே. புல்லட் குமார் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் 50ஆவது ஆண்டு விழாவை, தமிழகத் தியாக தலைவி சின்னம்மா பேரவை சிறப்பாக கொண்டாட உள்ளது.
இதனை அடுத்து 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி சின்னம்மா பேரவையை வலுப்படுத்தி சசிகலாவிற்கு துணை நிற்போம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்