சேலம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளை ஒட்டி சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் சரத்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறி, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரை பணம் இல்லா அரசியல் உருவாகவேண்டும் என்பதே நோக்கம். ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு 30 கோடி வரை செலவிட வேண்டும் என்றால் நானே தேர்தலில் போட்டியிட முடியாது. பணம் இல்ல அரசியல் என்றால் நாட்டின் அனைத்து குடிமகன் பணம் இல்லை என்றாலும் தைரியமாக தேர்தலில் போட்டியிட இயலும்.
தேர்தலுக்கு பணம் முக்கியமில்லை. தேர்தலுக்கு பணம் கொடுப்பது என்பது மக்களுக்கு பழகிய ஒன்றாக உள்ளது அதனை மாற்ற வேண்டும். மக்கள் நினைத்தால் எதையும் மாற்றிக் காட்ட முடியும். ஒரு புரட்சி மக்களிடமிருந்து உருவாக வேண்டும். இது நான் சம்பாதித்த பணம் இல்லை என்று மக்கள் நினைக்க வேண்டும். மாற்றுகின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம் அந்த மாற்றம் 2026 இல் வரும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை. தனித்து போட்டியிடுவதே சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். நாங்கள் பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். மேலும் மக்களை நம்பியே நாங்கள் செயல்படுகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை சமத்துவ மக்கள் கட்சி எந்தவித கூட்டணியை பற்றியும் நினைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலை விட 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நோக்கிய எங்களது பயணம் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல மாநிலங்களில் நியாயமான திட்டங்கள் தடுக்கப்படுகின்றன என்றார்.
மேலும், என்.எல்.சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், என்எல்சி விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தினால் உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வாக்கு அரசியலுக்காக மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அலட்சியம்" - சீமான் குற்றச்சாட்டு!