சேலம்: சேலம் டால்மியா போர்டு பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது சம்பந்தமாக இப்போது மட்டும் இல்லை, பல ஆண்டுகளாக பிரச்னையாகத்தான் உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு பிரச்னையை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டும். அதற்கு எப்போது விடை கிடைக்கும் என்று தெரியவில்லை. கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது சம்பந்தமாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், காவிரிக்காக நான் குரல் கொடுப்பேன். ஆனால், தனி மனிதனாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. காவிரி பிரச்னைக்காக கடந்த காலங்களில் நடிகர் சங்கத்தினர் பல போராட்டங்கள் நடத்தினர்.
அதுபோல் தற்போது நடிகர் சங்கம் உண்ணாவிரதம் உள்ளிட்ட ஏதாவது போராட்டத்தில் நடத்தினால், அதில் கலந்து கொள்வேன். புதிய தமிழ் திரைப்படங்களை இன்று மொபைல் வைத்துள்ள 7 கோடி பேரும் விமர்சனம் செய்கிறார்கள். அது அவரவரின் தனிப்பட்ட கருத்து. அதில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
நான் இதுவரை 5 படங்களைத் தயாரித்துள்ளேன். 15 படங்களை இயக்கி உள்ளேன். ஆனால், அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ப்ரீ வாங்குவதற்கு நான் பணம் கொடுத்துள்ளேன். அப்பா போன்ற படங்களை, அரசே எடுக்க வேண்டிய படத்தை நான் செலவழித்து எடுத்தும், பணம் கொடுத்து டேக்ஸ் ப்ரீ வாங்கியது வருத்தம் அளிக்கிறது. சமீபகாலமாக ஒரு ஆண்டுக்கு 500 முதல் 1,000 படங்கள் வெளிவராமல் இருக்கிறது. அதற்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நல்ல தரமான படம் தயாரித்தால், அது நிச்சயம் வெற்றி பெறும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், “தற்போது உள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில், தமிழக அரசு உரிய நடவடிக்கையை காவிரி விவகாரத்தில் எடுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டபடி, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
ஆனால், கன்னட அமைப்புகள் அங்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நடத்தினால் பலன் ஒன்றும் வரப்போவதில்லை. அதேநேரத்தில் மத்திய பாஜக அரசு, காவிரி விவகாரத்தில் அரசியல் செய்து வருவது நன்கு தெரிகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ambattur AC Fire : ஏசி இயந்திரத்தில் தீ விபத்து! நள்ளிரவில் பறிபோன தாய், மகள் உயிர்!