சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை மதுரா. இவர் இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அருள் வாக்குக் கூறி கன்னங்குறிச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமணத் தடை என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்வதாக விளம்பரப்படுத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளார்.
மதுராவிடம் அருள் வாக்கு கேட்க வரும் பக்தர்களை பிரம்பால் கொடூரமாக அடித்து மிரட்டி அவர்களுக்கு அருள்வாக்கு கொடுப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி மதுராவிடம் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து பிடித்து அவரிடம் பேசுகையில் அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டார், மதுரா. இதனையடுத்து அந்த இளம்பெண்ணை பெற்றோர் முன்னிலையில் பிரம்பால் அடித்து, காதலனை மறக்க வலியுறுத்தி மதுரா மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
அப்போது அப்பெண்ணின் பெற்றோர் மதுரா முன் கைகளைக் கூப்பி கண்களை மூடி அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் எடுத்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தற்போது மதுராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் அருள்வாக்கு கேட்க வரும் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மதுராவுக்கு, சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
மதுராவின் இந்த மிருகத்தனமான அருள்வாக்கு கூறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் மனித உரிமை ஆணையத்தை நாடி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம்பெண்ணை காதலை கைவிட வலியுறுத்தி, பிரம்பால் அடித்த திருநங்கை சாமியாரின் நடவடிக்கை சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:
தேக்கம்பட்டியில் தொடங்கிய புத்துணர்வு முகாம் - செம மேக்கப்பில் வந்த யானைகள்!