சேலம்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில், இப்படம் மூன்று திரைகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், திரையரங்கில் குளிர்பானங்கள் உள்ளிட்ட பண்டங்களை வாங்கியபோது, அதில் தேதி குறிப்பிடப்படாமலும், அங்கிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே உடனடியாக இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில் விரைந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர், திரையரங்கில் உள்ள இரண்டு கேண்டின்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150க்கும் மேற்பட்ட குளிர்பான டப்பாக்கள், பத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள், 50 லிட்டருக்கும் அதிகமான பால் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவற்றை திரையரங்கு முன் உள்ள கால்வாயில் கொட்டி அழித்தனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 லிட்டருக்கும் அதிகமான பாலில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட இந்த திரையரங்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சைவ சாப்பாட்டில் எலியின் தலை இருந்ததால் உணவகத்திற்கு சீல் வைப்பு!!