சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் பேய் சிவா (24). அப்பகுதியில் ரவுடியாக அறியப்படும் இவர், 2017ஆம் ஆண்டு பெருமாம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வீட்டிற்கு தனது கூட்டாளிகளுடன் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி 12 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், ஏழு லட்சத்து 89 ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கான வங்கி காசோலையையும் பறித்துச் சென்றுள்ளார். இந்த வழிப்பறி தொடர்பாக செந்தில்குமார் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பேய் சிவா உள்ளிட்ட அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரொக்கப் பணமும் வங்கிக் காசோலையும் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ரவுடி பேய் சிவா, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி பனங்காடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் ஜெகதீசன் மற்றும் அதே பகுதியில் பேக்கரியில் வேலை பார்க்கும் ஞானசேகர் ஆகியோரை முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளியுடன் சேர்ந்து தாக்கிள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த பேய் சிவா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிவதாபுரம் பகுதியில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரின் வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்தி அந்தப் பெண்மணியை காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தக் குற்றச் செயல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ரவுடி பேய் சிவா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிலும் பிணையில் வெளியே வந்த சிவா, மீண்டும் பெருமாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரை கடந்த மே 10ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்து அரை கிலோ எடையுள்ள 10 ஜதை வெள்ளிக் கொலுசுகளை பறித்துள்ளார் .
மேலும் அவரிடம் இருந்து 500 ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார். அதை தட்டிக் கேட்ட பொதுமக்களை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு கேடு வரும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார்.
இதுபோல் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டதால் இரும்பாலை காவல் ஆய்வாளர் அளித்த பரிந்துரையின் பேரில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமார் பேய் சிவாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ரவுடி பேய் சிவா கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.