சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரவுடி சந்தோஷ் குமார். இவர் பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். திருட்டு தொடர்பாக சந்தோஷ் குமார் பலமுறை சிறைக்குச் செல்வதும் பிணையில் வெளியே வருவதுமாக வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சந்தோஷ் குமார் ஒவ்வொரு வழக்கிலிருந்து வெளியே வந்ததும் தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் திருட்டு வழிப்பறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் நடந்துகொண்டிருந்தார். கடந்த 6ஆம் தேதி வழக்கம்போல், சேலம் அணைமேடு பகுதியில் நடந்துசென்ற கோகுல் ராஜ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து கோகுல் ராஜ் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அஸ்தம்பட்டி காவல் துறையினர் சந்தோஷ்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின், பிணையில் வந்த அவர் தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அஸ்தம்பட்டி காவல் துறையினரின் பரிந்துரையின் பேரில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமார் இன்று சந்தோஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல், சேலம் டவுன் காவல் நிலையத்திலும் சந்தோஷ் குமார் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது