சேலம்: தமிழக அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் தெரியாமல் தன்னிச்சையாக பூட்டர் என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து கல்வி நிறுவனம் தொடங்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நால்வரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை (Periyar University Technology Entrepreneurship and Research Foundation) என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
அரசு ஊழியராக இருக்கும் பொழுது வர்த்தக நிறுவனம் தொடங்கியதற்காகப் பல்கலைக்கழக தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே துணைவேந்தர் ஜெகநாதன் மீது பேராசிரியர்கள் நியமனம் செய்ததிலும், பல்கலைக்கழக நிதியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்து வந்தனர்.
அண்மையில் சென்னை புத்தகத் திருவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை பேராசிரியர் சுப்பிரமணி என்பவர் பெரியார் குறித்து புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அதற்காகவும் விளக்கம் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் நோட்டீஸ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஜெகநாதன் மருத்துவ பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்..! ஓராண்டாகியும் நியாயம் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..!