சேலம் மாவட்டம், கந்தம்பட்டி அருகேயுள்ள பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன். இவர், தனது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் இறந்து விட்டதாக கூறி, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி குளிர்சாதனப் பெட்டி கடையைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தார்.
உடனே கடைக்காரர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து, அக்டோம்பர் 13ஆம் தேதி மதியம் குளிர்சாதனப் பெட்டியை எடுக்க மீண்டும் கடைக்காரர்கள் வந்தனர். அப்போது அந்தப் பெட்டியினுள் முதியவர் உயிரோடு இருந்ததைக் கடைக்காரர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து முதியவரின் தம்பி சரவணன் மீது கவனக்குறைவாக நடத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தொடர்ந்து உயிருடன் இருந்த முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது குறித்து சேலம் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மலர்விழி விசாரணை நடத்தினார். அப்போது முதியவர் இறந்துவிட்டதாக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று (அக். 16) அதிகாலை முதியவர் பாலசுப்பரமணிய குமார் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
முதியவர் இறந்ததை அடுத்து, அவரது மற்றொரு தம்பியும், ஓய்வுப்பெற்ற காவலருமான சந்திரமெளலி தனது அண்ணனின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க...இறந்ததாக கூறி உயிரோடிருந்த முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்!