தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்கத் தமிழ்நாடு அரசுப் பல்வேறுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதனிடையே, சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு கவசமும் இல்லாமல் பணிபுரிந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிரந்தர, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இரண்டாயிரம் பேருக்கு முகக்கவசம், கைகழுவும் திரவம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் சதீஷ் வழங்கினார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபோதையில் காவலர்களிடம் தகராறு செய்தவர் கைது!