சேலம் - நாமக்கல் எல்லையான மல்லூர் மற்றும் அதனைச் சுற்றி 50 கிராமங்கள் உள்ளன. சேலத்திலிருந்து நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மல்லூரை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால், புறநகர் பேருந்துகள் மல்லூர் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் பெண்கள், வயதானவர்கள் நான்கு கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனர். எனவே, மல்லூர் வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், மல்லூர் பகுதிக்கு புறநகர் பேருந்துகள் வந்து செல்லாதது ஒருபுறம் என்றால், தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வது மற்றொரு பிரச்னை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இயதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்துச் சென்ற பொதுமக்கள், சாலையோரம் நின்றபடி அவ்வழியே சென்ற பேருந்துகளை நிறுத்தி ”வழி - மல்லூர்” என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை பேருந்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினர்.
இதையும் படிங்க: நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி - சாலையில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்