சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஜருகுமலை உள்ளது. இங்கு கீழூர், மேலூர் என்ற இரண்டு மலைக்கிராமங்கள் உள்ளன. இரு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தாலும், அடிப்படையான சாலை வசதி அங்கு இல்லை. இரு கிராமங்களுக்கும் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலையே நீடித்து வந்தது.
இதையடுத்து 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலைப் பாதை அமைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில், இந்தப் பகுதிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனும் திமுகவினரும் மலை அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றனர். பின்னர் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாததால் ஏழு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்றடைந்தனர்.
நடந்து சென்ற பார்த்திபனுக்கு அங்குள்ள கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் கிராம மக்களுடன் பேசிய பார்த்திபன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவ வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் செயல்படும் பள்ளிக்குக் கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து மலைவாழ் மக்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவேன் என்று பார்த்திபன் மக்களிடம் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!