சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலையிழந்த தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு ஐஓசி நிறுவனத்தில் வேலை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் விஜயன்," சேலம் அடுத்த கருப்பூரில் இயங்கிவந்த ஐஓசி எல்.பி.ஜி பாட்லிங் பிளாண்ட், விரிவாக்கப் பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர்.
அவர்களை பாதுகாத்திட சிஐடியூ சார்பில் பல்வேறு போராட்டங்களும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.தற்போது விரிவாக்கப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் ஆலை உற்பத்தி தொடங்கவுள்ளது. எனவே முன்பு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் அதே ஆலையில் பணி வழங்கிட வேண்டும் என்று ஆலை நிர்வாகத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக வேலையிழந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஆவண செய்ய வேண்டும். மேலும் ஐஓசி நிறுவனமே பாட்லிங் ஆலையை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும். தனியாருக்கு ஆலையை வழங்கிடக் கூடாது என ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.