சேலம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கலைவாணி (36), நெஞ்சுக்கூட்டில் நுரையீரல் பகுதிக்கு மேலே ரத்த நாளத்தில் கட்டி உருவாகி அவதிப்பட்டுவந்தார். நாமக்கல், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கலைவாணி மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது, அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும் என்றும் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த அவருக்கு, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரியவகை கட்டியை அகற்றிவிடலாம் என அரசு மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் ஆலோசனையின்பேரில், மருத்துவர் ராஜராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலைவாணிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரின் நுரையீரலின் மேல் பகுதியில் ரத்த நாளத்தில் ஏற்பட்டிருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், "மிகவும் சிக்கலான இடத்தில் கலைவாணிக்கு கட்டி ஏற்பட்டது.
அதைப் பரிசோதித்து இலவசமாக அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறோம். ஐந்து நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போது அவர் பூரண குணம் பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ரத்தக் கட்டியை அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு நான் பாரட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா காலத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த அறுவை சிகிச்சை அரங்கங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சேலம் அரசு மருத்துவமனையில் வரும் கல்வியாண்டிற்குள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள், ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துவருகிறோம். இது மிகப்பெரிய சாதனை முயற்சி" என்றார்.
அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ள கலைவாணி, ஏழ்மையான நிலையில் இருக்கும் தான் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்திருப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சவாலான இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துகாட்டிய அரசு மருத்துவர்கள்!