சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) குமாரபாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆனால் அவரது உடலை நேற்று (செப்டம்பர் 1) மாலை வரை, சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அப்புறப்படுத்தாமல், அப்படியே படுக்கையிலேயே வைத்திருந்ததால், அந்த அறையில் சிகிச்சைப் பெற்று வந்த சக நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் புகார் தெரிவித்தும், தாமதமாக இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டு மற்றும் கழிப்பறையில் சுகாதார சீர்கேடு நிறைந்து இருப்பதாகவும், கிருமி நாசினி மருந்து முறையாக தெளிக்கப்படுவதில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சை வார்டின் சுகாதார சீர்கேடு குறித்த காணொலி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவுள்ளது. நோயாளிகளின் இந்த பரபரப்பு புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள சேலம் அரசு பொது மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், "சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் கரோனாவால் உயிரிழந்தனர். ஒவ்வொரு உயிரிழப்பும் தனித்தனி அறையில் நடந்தது என்பதால் அவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இறந்த நபர்களின் உடல் முழுவதுமாக மூடப்பட்டு தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்யாத, கரோனா உடனடி நடவடிக்கை குழுவிடம் (rabbit response team) விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளராகிறாரா நடிகர் விஜய் வசந்த்?