சேலம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன். இவரது மனைவி கோமதி. நிறைமாத கர்ப்பிணியான கோமதி, பிரசவத்திற்காக நேற்று இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சில நிமிடங்களிலே பெண் குழந்தை தான் பிறந்ததாக மாற்றிக் கூறியாதால் குழந்தையின் பெற்றோர், உறவினர் உள்ளிட்டோருக்கு குழந்தை ஆணா? பெண்ணா? என குழப்பம் ஏற்பட்டது. பின்னர் குழந்தை மாற்றி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் வெங்கடேசன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர், மருத்துவமனை ஊழியர் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனிடையே குழந்தையின் தந்தையான வெங்கடேசன் கூறும்போது, மருத்துவர்கள் பாலினத்தை மாற்றிக் கூறியதால் எங்களுக்கு பிறந்த குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தையை மாற்றியிருக்க கூட வாய்ப்பு உள்ளதால், சோதனை நடத்தி இது எங்கள் குழந்தை தான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக் கூறியதால் எழுந்த பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.