சேலம்: சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் சேர்ந்த சவுகத் அலி, சர்மிளா பானு தம்பதியினருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இவர்களுக்கு நசீர் அகமது(6) என்ற ஆண் குழந்தை உள்ளது.
கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்த சவுகத் அலி, தன்னுடைய ஆறு மாத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முடிவு செய்தார். அதற்காக தரகர் சேட்டு என்பவர் மூலம் சுந்தரம் என்பவருக்கு குழந்தையை விற்றார்.
இந்நிலையில், குழந்தையை பார்க்க ஈரோட்டிலிருந்து நேற்று (நவம்பர் 23) சேலம் வந்த பானுவின் தந்தை, குழந்தை வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், குழந்தையை விற்ற தகவல் தெரியவர மகள் சர்மிளா பானுவை அழைத்துச் சென்று அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, சவுகத் அலியிடம் விசாரித்த காவல்துறையினர், தரகர் சேட்டு, பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். சுந்தரத்திற்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததும், தரகர் சேட்டு மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையைப் பெற்றுக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்பின்பு, சுந்தரத்திடமிருந்து குழந்தையை காவல்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். கடனை அடைப்பதற்காக பெற்ற குழந்தையை தந்தையே விற்பனை செய்த விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டியைக் கொலை செய்து நகைகள் கொள்ளை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை