தமிழ்நாட்டில் சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டிவந்தன.
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர் .
ஏராளமான காடுகள், விளை நிலங்கள், குடியிருப்புகள் அழிக்கப்பட்டு இந்தச் சாலை போடப்படுவதால் இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை இடையே மட்டுமே நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விதிமுறைகளை மீறி சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கு கடந்த 20ஆம் தேதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரசிங் மூலம் விசாரிக்கப்பட்டது.

இதனையடுத்து, எட்டு வழிச் சாலை வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், கொந்தளிப்பான நிலையில் உள்ள சேலம் விவசாயிகள், எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் கை, கால், வாயில் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதேபோல ஜருகுமலை நிலவாரப்பட்டி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், " கரோனா தடைக்காலத்தில், பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசுகள், இயற்கை வளங்களை அழித்து எட்டு வழிச் சாலை திட்டத்தை அமைத்தே தீருவேன் என முழுவீச்சில் செயல்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. எந்த ஒரு காலகட்டத்திலும் இயற்கை வளங்களை அழித்து போடப்பட உள்ள எட்டு வழிச் சாலைக்காக எங்கள் உயிரே போனாலும் விளைநிலங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் " என தெரிவித்தனர்.
இதையும் படிங்க...எட்டு வழிச் சாலை வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!