சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அதிலும் குறிப்பாக ராமலிங்கசாமி தெரு பகுதியில் ஆழமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அதோடு அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் கனமழையில் உணவு, உடைமைகளை இழந்த பொதுமக்கள் நிவாரணம் வழங்கக்கோரி சேலம் கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து சாக்கடையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," ஒவ்வொரு முறையும் மழை வருகின்றபோது இங்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க மட்டுமே வந்தார். மீண்டும் தேர்தல் வரும்போது வருவார். உடைமைகளை இழந்து நாங்கள் வீட்டிற்குள் செல்லாமல் தற்போது சாலையில் தங்கியுள்ளோம். எங்களை இதுவரை அரசு அலுவலர்கள் வந்து பார்க்கவில்லை" என்று தெரிவித்தனர்.