கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா தொற்று அதிகபட்ச எண்ணிக்கையை தொடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தும் தொற்று எண்ணிகை அதிகரித்தே காணப்பட்டது. மேலும் வருகின்ற திங்கள்கிழமையுடன் (மே.24) ஊரடங்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்புகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின. தற்போது வரும் திங்கள்கிழமை முதல் 30ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்தியாவசியத் தேவைகளுக்காக இன்றும் (மே.22) நாளையும் (மே.23) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளார். அதோடு வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயங்க அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் பயண சேவை தொடங்கின. நாமக்கல், ஈரோடு, மதுரை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலிருந்து பேருந்துகள் செல்லத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!