சேலம் தனியார் கல்லூரியில் கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் எரிக் முலுங் கேக்துலி கடந்த 2016ம் ஆண்டு எம்பிஏ படித்தார். பின்னர் அந்த படிப்பில் தேர்ச்சி அடையாத நிலையில் இருந்த எரிக், மீண்டும் அரியர்ஸ் எழுத சேலத்தில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.
இவரைப் போலவே கென்யா நாட்டு இளம்பெண் ஒருவரும் சேலம் நகரப்பகுதியில் அறை ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி , கென்யா நாட்டு இளம்பெண் தங்கியிருந்த அறைக்கு எரிக் சென்று உள்ளார்.
அங்கு அவர் கென்யா நாட்டு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எரிக்கை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, கென்யா நாட்டு இளைஞர் எரிக் முலுங் கேக் துலிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 17,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.