சேலத்தில் கடந்த மாதம் இரவு நேரத்தில் சாலையோரங்களில் படுத்து உறங்கிய மூன்று முதியவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டனர். சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபராக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (27) என்பவர் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சேலத்தில் மூன்று பேரை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகத் தெரிவித்தார்.
இதனிடையே முதியோர்கள் கொலை தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டிச்சாமியை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என சேலம் டவுன் காவல் துறையினர், முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில்குமார், ஆண்டிச்சாமியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஆண்டிச்சாமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலையில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது' - அமைச்சர்