சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சட்டவிரோதமாக விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தினை எட்டு வார காலத்திற்குள் விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் உத்தரவு பிறப்பித்து மூன்று மாத காலம் ஆகியும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை ஒப்படைக்காமல் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து எட்டு வழிச் சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக பேசிய விவசாயிகள், 'எட்டு வழிச் சாலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது . குடும்ப செலவிற்குக்கூட நிலத்தை பயன்படுத்த முடியாத சூழலில் தவிக்கின்றோம். எனவே நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு எங்கள் நிலத்தை எங்களுக்கே வழங்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்' என எச்சரித்தனர்.
இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.