சேலம் முதல் சென்னை வரையில் எட்டு வழிச்சாலை திட்டம் அறிவித்த நாள் முதல் விவசாயிகள் போராடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு நிலம் எடுக்க தடை விதித்தது.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மக்களின் நன்மைக்காக செயல்படுத்தப்படுகிறது. விபத்துகளைத் தவிர்ப்பது மற்றும் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியே சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு 7% விவசாயிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தச் சாலை மக்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்படும்' என்றார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்துள்ள ராமலிங்கபுரத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை கண்டித்தும், அவர் கூறிய எட்டு வழிச்சாலை சம்பந்தமான கருத்துக்களை திரும்பப் பெறக்கோரியும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருகிறார். எந்தவொரு விவசாயியும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 7 விழுக்காடு விவசாயிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று உண்மைக்கு புறம்பான பொய்களை கூறி வருகிறார் . நாட்டின் வளர்ச்சிக்காக இந்த சாலை அமைக்கப்படும் என்றால், ஏற்கனவே உள்ள சாலைகளில் இந்த நாடு என்ன வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். இருக்கும் சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என குறிக்கோளாக உள்ளார். எந்த ஒரு காலகட்டத்திலும் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அமையவும் விடமாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்த சாலை திட்டத்தை ரத்து செய்வோம். எங்களுடைய காலத்திற்கு பிறகும் எங்களுடைய பிள்ளைகள் இந்தச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடுவார்கள். முதலமைச்சர் உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிடவில்லை எனில் மாபெரும் போராட்டத்தை அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து நடத்துவோம்” என்றனர்.