சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. முதல்நாளில் 35 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று (செப். 2) காலையில் 40 விழுக்காடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து சில பகுதிகளில் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம், சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் சென்றுவருகின்றன. ஆனால் பல நகரப் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றுவருகின்றனர்.
![Salem buses with over crowd and no social distancing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-bus-overcrowd-vis-pic-script-7204525_02092020154656_0209f_1599041816_709.jpg)
கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் பின்பக்கமாக ஏறி முன்பக்கமாக இறங்கிச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்காமல் பெரும்பாலான பேருந்துகளில் பொதுமக்கள் முன்பக்கமாகவே ஏறிச் சென்றனர்.
நகரப் பேருந்துகளில் 22 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
இரண்டு பேர் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கம்போல் இருவர் அமர்ந்தவாறே பயணத்தை மேற்கொண்டனர். அத்துடன் பயணம் மேற்கொண்டவர்களில் ஒரு சிலர் முகக்கவசம் அணியவில்லை.
அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதாலும், இதுபோன்று புதிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும் கரோனா தொற்று மேலும் பரவவுதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று கண்காணிக்க வேண்டும் என்றும், கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்து அரசு ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு - ஆட்சியர் தகவல்