சேலம்: மத்திய அரசின் 'செயில் ரிப்ரேக்டரி நிறுவனம்' (Sail Refractory Company), சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மெக்னீசியம் எனப்படும் வெல்லைக்கல்லை வெட்டி எடுத்து, சேலம் உருக்காலைக்கு அனுப்பி வருகிறது. இந்த செயில் ரிப்ரேக்டரி நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பர்ன் அண்ட் கோ என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து, சேலம் உருக்காலை நிர்வாகம் இந்த ஆலையை வாங்கியபோது, பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக போராடியும், சம ஊதியம் பெற முடியாமல் தவித்து வருவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஆலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு செயில் நிர்வாகம் அண்மையில் வழங்கி உள்ளது. அந்த தனியார் ஒப்பந்ததாரர்கள், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்குவதால், ஆலையின் வழக்கமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பணியாளர்களும் ஊதியம் இன்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதனைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், செயில் ரிப்ரேக்டரி நிறுவன வளாகத்தில் நேற்று (டிச.22) மாலை முதல், தொழிலாளர்கள் மறுவாழ்வு முன்னேற்ற சங்கத்தினர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை, மத்திய அரசு நிறுவனமான செயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படும் பணியினைக்கூட தடுத்து நிறுத்தி, மிரட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆலையின் முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்களது பதவிக்காகவே நிறுவனத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தொழிலாளர்களின் பிரச்னை குறித்து சேலம் உருக்காலை நிர்வாக உயர் அதிகாரிகள் தங்களுடன் கலந்து பேசி, சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் மறுவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சேட்டு அளித்த பேட்டியில், “கடந்த 2000ஆம் ஆண்டு முதல் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
அப்போது இருந்த செயில் நிர்வாகம், எங்களுக்கு பணி நிரந்தரம் அல்லது சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் மறுவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் செயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவும் நடைமுறைக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியைச் சந்தித்து, எங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தோம். அவர் மத்திய அரசுக்கு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பரிந்துரை கடிதம் அளித்தார்.
அதன் அடிப்படையில், டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 145 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் அல்லது சம ஊதியம் வழங்குவோம் என்று செயில் நிர்வாகம் கூறி ஏமாற்றி வருகிறது.
தற்போது உள்ள நிர்வாகத்தினர், தொழிலாளர்களாகிய நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும், எங்களுக்கு காவல்துறை பலம் உள்ளது எனவும் மிரட்டல் தொணியில் கூறி, தொழிலாளர்களின் உரிமைகளை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தினர் தவித்து வருகிறோம். உடனடியாக இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வைக் காண வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்கள் கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப்பெறுங்கள் - மத்திய நிதியமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்!