சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நேற்று ஆண்டாள் யானையின் பாகன் காளியப்பன் யானை தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பாகனின் உடலை அவரது குடும்பத்தாரிடம் வனத்துறை அலுவலர்கள் இன்று ஒப்படைத்தனர்.
அப்போது வனத்துறை முதன்மை பாதுகாவலர் அன்வர்தீன் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் காளியப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர் குடும்பத்தாருக்கு வனத்துறை சார்பில் நான்கு லட்சம் ரூபாய் காசோலையும், வனத்துறை ஊழியர்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் அளிக்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வனத்துறை அலுவலர் பெரியசாமி, பாதிக்கப்பட்டவரின் மனைவி சபரிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், ஆண்டாள் யானை மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.