சேலம்: ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களைப் பிடிக்க, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையில், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கொண்ட குழுவினர் சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடத்திய சோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் என 23 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் மீது ரயில்வே சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, பிடிபட்டவர்களிடம் இருந்து 1 கோடியே 54 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம்.
இதையும் படிங்க: மெஷின்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை 50 சதவீதம் உயர்வு - தெற்கு ரயில்வே தகவல்
செப்டம்பர் மாதம் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் 23 ஆயிரத்து 158 பேர் எங்களிடம் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. எனவே ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய வேண்டாம்.
மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் கொண்டு சென்றால் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ரயில்வே விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பயணிகள் ரயில் விதிமுறைகளை கடைப்பிடித்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகளிலும், விதிமுறைகளை மீறுவோரைக் கண்டறியும் பணியில் பாதுகாப்புப் பணி குழுவினர், 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.