சேலம் மணியனூர் பகுதியிலுள்ள அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, சேலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பிலும் இலவச சட்ட ஆலோசனைக் குழு சார்பிலும் பயிற்சி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேசிய அவர், குழந்தைத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் அல்லது குழந்தைகள் நலக்குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினார். மேலும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஸ், “சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 165 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுதவிர வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் வேலைக்காகச் சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு வந்த 1165 சிறார்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்; இவர்களில் 118 பேர் சிறுமிகளாவார்.
இந்தக் குழந்தைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் முட்டை நிறுவனங்களில் பணியாற்றவும் உணவகங்கள், கல்லூரிகளில் துப்புரவுப் பணியில் சேர்த்துவிடவும் அழைத்து வரப்பட்டார்கள். இதுதவிர ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணிக்கும் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களைக் குழந்தைகள் நலக்குழுவினரும் ரயில்வே காவல் துறையினரும் கண்காணித்து குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் சேர்த்துவருகிறோம். இனிமேலும் செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்திலிருந்து 26 குழந்தைகள் மீட்பு!