சேலம்: மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறியச் செய்யும் நோக்கில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், ‘மக்கள் ஆசி யாத்திரை’ என்னும் சுற்றுப் பயணத்தை சேலம் மாவட்டத்தில் மேற்கொண்டார். மாவட்டத்தின் மல்லூர் பகுதியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் எல். முருகன் பேசுகையில், "சமூகநீதியைக் கடைப்பிடித்து அனைத்துச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பினை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்ற நாற்பத்து மூன்று மத்திய அமைச்சர்களும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டிற்கு மோடி அரசின் எண்ணிலடங்கா திட்டங்கள்
அவர்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்கும் மரபினை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்போட்டு கெட்ட எண்ணத்துடன் நடக்கவிடாமல் செய்துவிட்டனர். மத்திய அமைச்சர்களை நோக்கி மக்கள் செல்லாமல் மக்களை நோக்கி மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றுவருகிறது. மக்களைத் தேடிச் சென்று அவர்களின் குறைகளை மத்திய அமைச்சர்கள் கேட்டு அதனைத் தீர்த்துவைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். மத்திய அமைச்சரவையில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளித்து சமூகநீதிக் காவலராகப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.
காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்
தமிழ்நாட்டிற்கு எண்ணிலடங்கா திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவருகிறார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.
மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை
உலக அளவில் 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. யாரிடமிருந்தும் தடுப்பூசியை வாங்காமல் நமது அறிவியலாளர்களைக் கொண்டு அதனைத் தயாரித்து, அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வரும் தீபாவளி வரை நியாயவிலைக் கடைகளில் 'கரீப் கல்யாண் யோஜனா' திட்டத்தின்கீழ் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்கிவருகிறது.
2014ஆம் ஆண்டிற்கு முன்னர் விவசாயிகள் தற்கொலை நாள்தோறும் நடந்துவந்தது. 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்வது கிடையாது.
முருகனை சாரட் வண்டியில் அழைத்துவந்த கட்சியினர்
அந்த மோசமான சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் காப்பாற்றப்பட்டு, அவர்களின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டம், ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்புத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சேலம் மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எல். முருகன் கலந்துகொண்டார். அவரை சாரட் வண்டியில் அமரவைத்து நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துவந்தனர்.
அங்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், பொதுமக்களின் வரவேற்பினை எல். முருகன் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சமூகநீதியை இந்தியா முழுவதும் நிறைவேற்றியது மோடிதான் - எல். முருகன் பெருமிதம்