சேலம் சூரமங்கலம் நரசோதிபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். மனை வணிக அதிபரான இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார்.
இதன் பின்னர் மாதேஸ்வரன் வீட்டைக் காலிசெய்து வேறோரு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இருப்பினும், முன்பணத் தொகை 15 ஆயிரம் ரூபாயை செல்வராஜ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தொகையை திரும்பத் தரும்படி கேட்டு, மாதேஸ்வரன் செல்வராஜிடம் அடிக்கடி தொல்லை கொடுத்துவந்துள்ளார்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு செல்வராஜிடம் மாதேஸ்வரன் அவரது நண்பர்கள் பெருமாள், செல்வம் உள்ளிட்டோர் தகராறு செய்துள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றியதால் செல்வராஜை தாக்கியுள்ளனர். இதில் செல்வராஜ் உயிரிழந்தார்.
இதனையடுத்து சூரமங்கலம் காவல் துறையினர் மாதேஸ்வரன், பெருமாள், செல்வம் உள்ளிட்டோரைக் கைதுசெய்தனர். பிறகு மூவரும் பிணையில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
வழக்கை விசாரித்துவந்த நீதிபதி ராஜேந்திரன், கைதுசெய்யப்பட்ட மாதேஸ்வரன், செல்வம், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து மூவரையும் கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.