சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டுநாள் பயணமாக சேலம் வந்திருந்தார். பொங்கல் திருநாளை சிலுவம்பாளையத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சப்பானிப்பட்டியில் அருந்ததியர் காலனியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்திற்கு வந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜன.15) சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் 200 பேர், முதலமைச்சரும் அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜலகண்டபுரம், காட்டம்பட்டி, தோரமங்கலம், சோரகை, குஞ்சாண்டியூர், கோனூர், வனவாசி, குப்பம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏ.வெங்கடேஸ்வர குமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இன்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார். நாளை காலை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதனையடுத்து கரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், முகாம் அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையும் படிங்க: பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்த நாள் விழா - மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ்