சேலம் அழகாபுரம் அருகே உள்ளது அன்னை தெரசா நகர். இந்தப் பகுதி சேலம் மாநகராட்சியின் நான்காவது மண்டலத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்ததால், மழைநீர் வடிய வடிகால் வசதியில்லாததால் இப்பகுதியை நீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாகன ஒட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் தண்ணீருக்குள் வாகனத்துடன் விழும் காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன.
மேலும் இந்த தண்ணீர் தற்போது பச்சை கலராக மாறியதோடு, கொசு உற்பத்தியாகும் நிலையிலும் உள்ளது. இது குறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் எனவும், இனியாவது மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனபோக்குடன் செயல்படாமல் விரைந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு உரிய வடிகால் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் - பொதுமக்கள் அவதி!