சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி குருநாதன் தெருவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இப்பள்ளியில், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அப்பகுதியில், மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சாலையை சீர் அமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் சேலம் ஆத்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், ஒரு வாரத்தில் சாலையை சீரமைத்து தருவதாக அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால், ஆத்தூர் சேலம் இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.