கன்னங்குறிச்சி அருகிலுள்ள சின்னதிருப்பதி பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
எல்லா வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய விவசாய கிணற்றில் இருந்து வியாபார நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
![Public opposing to selling water](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/tn-slm-01-08-water-issue-script-tn10024_08042019113613_0804f_00289_213.jpg)
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் தண்ணீரை அவர் வணிகம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி போயுள்ளதாகவும் பூரி ராஜாவிடம் இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
![Public opposing to selling water](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/tn-slm-01-08-water-issue-script-tn10024_08042019113615_0804f_00289_94.jpg)
ஆனால் அவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து இன்று சின்னதிருப்பதி பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ராஜாவின் வீட்டு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சூழலில் தன்னுடைய கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீரை எடுத்து விற்று, சுற்றுவட்டார மக்களின் நீராதாரத்தை சுரண்டி வருகிறார். இதற்கு அவர் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.