சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் கருகிய நிலையில் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து உள்ள விவசாயிகளைக் காப்பாற்ற, ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை போதிய தண்ணீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகி விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 அறிவித்தது. இந்த நிவாரணம் போதிய அளவில் இல்லை. எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மேலும் விருதுநகர் மாவட்டம் பிள்ளையார் குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அம்மையப்பன் என்ற விவசாயி, சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளர் தங்கப் பாண்டியன் மாற்றப்பட்ட நிலையில் அவர் எதற்கு இந்த கூட்டத்திற்கு வந்தார் என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஊராட்சி செயலாளர் அம்மையப்பன் மீது காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார். இந்நிலையில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தங்கராஜ் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக தமிழ்நாடு அரசு விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜன.1 முதல் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் - நல்லசாமி அறிவிப்பு