சேலம் மாவட்டம் மல்லியகரையைச் சேர்ந்தவர் அம்மாசி (35). இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடு ஒன்றில் நுழைந்து ஒன்றரை சவரன் தோடைத் திருடி அந்த, நகையை தம்மம்பட்டி பகுதியில் உள்ள அடகுக் கடை ஒன்றில் விற்க முயன்றார்.
அப்போது அடகு கடைக்காரர், அந்த பெண் விற்க வந்தது திருட்டு நகை எனத் தெரிந்துகொண்டு, இதுகுறித்து உடனே மல்லியகரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அடகு கடைக்கு வந்த காவலர்கள் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்தப் பெண் வீடு ஒன்றில் நகை திருடி வந்ததும், பின்னர் நகையை அடகுக் கடையில் விற்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார். அதனையடுத்து, அம்மாசியிடம் இருந்து திருட்டு நகையைப் பறிமுதல் செய்த காவலர்கள், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று சிறையில் அடைக்கப்பட்ட அம்மாசி கைப்பேசி மூலம் யாருக்கும் தெரியாமல் பேசி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த சிறை பெண் காவலர்கள் சிலர் அம்மாசியிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனையடுத்து அவரிடன் கைப்பேசி எப்படி வந்தது என காவல் துறை விசாரணை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட அம்மாசி சிறையில் அடைக்கப்பட்ட போது செல்போனை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். அப்போது சிறையில் பணியில் இருந்த வார்டன் அம்மாசியை முழுமையாகச் சோதனை செய்யாமல் சிறைக்குள் அனுமதித்துள்ளார்.
இதையடுத்து அன்று பணியில் இருந்த சிறை வார்டன் மீது துறை நடவடிக்கை எடுக்க சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போன் திருடும் கும்பல் கைது!