சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் கடந்த சில நாட்களாக தை மாதம் திருவிழா நடந்துவருகிறது. இவ்விழாக்களில் தினமும் நடைபெறும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியை திருவிழா குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இதேபோல இரும்பாலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கோயில் திருவிழாவில், மேடை கலாசார நடனம் என்ற பெயரில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருவிழா நடைபெற்ற இடத்திற்கு வந்த இரும்பாலை காவல் துறையினரும், அங்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று அவர்கள் மாநகராட்சி ஆணையருக்கு பதிலளித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சேலம் மாநகரம் முழுவதும் நடக்கும் கோயில் திருவிழாக்களில், பெண்களின் ஆபாச மேடை நடனங்கள் கடந்த ஒரு வாரமாக நடந்துவருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
கலாசார நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடக்கும் இந்த ஆபாச மேடை நடனங்களுக்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சியினரே மேற்கொள்வதால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் உடனடியாக உயர் அலுவலர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மேடை ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி கேரள மாணவர் உயிரிழப்பு: திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்