சேலம்: ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆணவப்படுகொலைக்கு உள்ளாகி சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இளம்பெண் அனுசுயாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ''கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டமகன் சுபாஷை தந்தையான தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அவரது பாட்டியையும் கொன்றார்.
தண்டபாணியின் கொலை வெறித்தாக்குதலை நீண்ட நேரம் போராடி எதிர்கொண்ட சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.
அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்த சேலம் அரசு மருத்துவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும். சாதி மறுப்புத் திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு திருமணம் செய்து கொண்ட இளம் மருமகளையும் தண்டபாணி சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் சாதி வெறி ஆட்டிப் படைக்கிறது.
எனவே, சமூகத்தில் இருப்பவர்கள் சாதி வெறியை எதிர்த்துப் போராட வேண்டும். அனுசுயாவிற்கும், சுபாஷுக்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது. நாம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு அரசு சாதிய ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது தான். தமிழ்நாடு முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அப்போது தான் சாதி வெறியைத் தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சாதிய ஆணவக் கூட்டம் என்றால், யார் யார் எல்லாம் பின்னால் தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான், சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
தனது ஒரே மகனையும், தாயையும் வெட்டக் கூடிய அளவுக்கு சாதி வெறி தற்போது தலை விரித்து ஆடுகிறது. எனவே, இந்த கொடுமை நீடிக்கக் கூடாது. சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள சாதி வெறியை எதிர்த்து போராடாமல், அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே
பள்ளிக்கூடத்தில் இருந்தே விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். சாதி வெறியினை எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும். இந்த சாதி வெறியை கருவறுக்க, வேரறுக்க அனைத்து சமூகத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி வெறிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்’’ என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ''கலைஞர் ஆட்சியில் மூடை முடையாக அரிசி பருப்புகளை தூக்கிச் சென்றேன்'' - மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி