சேலம் மாநகர் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அய்யனார். இவருக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் 4 வயது மகன் ஆகிய இருவரும் வீட்டின் அருகிலுள்ள சாலையில் இன்று (அக்.31) காலை விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருவரும் திடீரென காணாமல்போனதால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனே, சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் கிச்சிபாளையம், பச்சப்பட்டி, சன்னியாசிகுண்டு, எருமாபாளையம், களரம்பட்டி பகுதி முழுவதும் குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சிறுவர்கள் இருவரும் கிச்சிபாளையம் அன்பு இல்லம் பின்புறம் விளையாடி கொண்டிருந்ததைக் கண்ட காவல் துறையினர், பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
புகார் அளித்த ஒரு மணி நேரத்தில், காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினரை சேலம் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.