சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்த மூல செங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அதே பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இருவருக்கும் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த நிலையில் சென்ற 8ஆம் தேதி மூலச்செங்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு பெண் குழந்தைகளையும் திவ்யா வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மூன்று பேரையும் கிணற்றில் இருந்து மீட்டு உள்ளனர்.
குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில், திவ்யா தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று திவ்யா பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை தேறியது. இதனையடுத்து தம்மம்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது திவ்யா போலீஸாரிடம், “இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகளாக பிறந்துவிட்ட நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்று மாமியார் கலைச்செல்வி வற்புறுத்தினார். இரண்டு குழந்தைகள் போதும் குடும்பம் இருக்கும் நிலையில் அவர்களை வளர்ப்பதே சிரமம் என்று கூறி குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்டேன். இதனால் சம்பவத்தன்று காலை கணவர் இளையராஜாவும் மாமியார் கலைச்செல்வியும் என்னிடம் தகராறு செய்தனர். என் முகத்தில் முழிக்கவே கூடாது என்று மாமியார் என்னை மனம் நோகும்படி கடுமையாகத் திட்டினார்.
எனவே மனம் வெறுத்த நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இரண்டு குழந்தைகளையும் முதலில் கிணற்றில் தள்ளிவிட்டு நானும் குதித்தேன். ஆனால் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் குதித்து எங்களைக் காப்பாற்ற முயன்றனர். எனது குழந்தைகள் இறந்துவிட்டனர்" என்று கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார். இதனையடுத்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் இளையராஜாவையும் மாமியார் கலைச்செல்வியையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.