சேலம்: 12 ஆம் வகுப்பு முடித்த இளைஞர், வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்ததால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர் அடக்கம் செய்யப்பட்ட இளைஞரின் உடலை இடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து அங்கேயே பிணக்கூராய்வு நடத்தினர்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள வேலு புதுத் தெருவைச் சேர்ந்தவர் கிரி (18). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நிலையில் நேற்று முன்தினம் ( ஏப்.07 ) இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கிரி சில நாட்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததால் உயிரிழந்து விட்டதாக தாயார் தரப்பில் கூறப்பட்டது. இதனை அடுத்து அவசர அவசரமாக நேற்று காலை ( ஏப்.08 ) மணியனூர் பகுதியில் உள்ள போயர் இடுகாட்டில் கிரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கிரியின் தாயார் செல்விக்கும் அவரின் கணவர் மாணிக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் கிரி தனது தாயார் செல்வியுடன் வேலு புது தெருவில் வசித்து வந்துள்ளார். பள்ளி மாணவரான வேலு, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பலருடன் சேர்ந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாணிக்கம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல வருவாய்த் துறையினரும் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் இது சந்தேக மரணம் என்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வருவாய்த் துறையினர் முன்னிலையில் மாணவன் கிரியின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர். போதை ஊசி பயன்படுத்தியதால் கிரி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகு இது தொடர்பான நடவடிக்கையில் எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே , போயர் இடுகாடு பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் குடியிருப்பு வாசிகள் திறந்தவெளியில் பிணக்கூராய்வு நடத்தியதால் துர்நாற்றம் வீசுவதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் பிணக்கூராய்வு நடத்த வேண்டாம் என்றும் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகள் கொலை.. நெல்லை பகீர் சம்பவம்!