சேலம்: இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் நெருங்கி அமர்ந்து செல்லும் காதல் ஜோடிகளிடமும், தனியாக செல்லும் இளம் பெண்களிடம் பணம் மற்றும் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் காவல் ஆணையர் உத்தரவின்படி, அன்னதானப்பட்டி உதவி காவல் ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையின் விசாரணையில் அம்மாபேட்டையை அடுத்துள்ள அல்லிக்குட்டையை சேர்ந்த சர்க்கரை வியாபாரி சரவணன் என்பவரே பணப்பறிப்பில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் சரவணனை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே ஓமலுார் அருகே 24 வயது கல்லுாரி மாணவி ஒருவர் தன்னிடம் அடையாளம் தெரியாத ஒருவர் மிரட்டி இரண்டு பவுன் நகையை பறித்ததாக இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல் கொண்டலாம்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அளித்த புகாரின்படி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சரவணன் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சரவணனனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதல் ஜோடிகள், இளம்பெண்கள், தகாத உறவு வைத்திருக்கும் ஜோடிகள் என 100க்கும் மேற்பட்டோரை மிரட்டி சரவணன் பணம் பறித்துள்ளதும், இதை கடந்த 10 ஆண்டுகளாக செய்துவந்ததும் தெரியவந்தது.
அதன்பின் அவரிடம் இருந்த நகைகள், பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பட்டியலில் தொழிலதிபர், அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்களின் பிள்ளைகளும் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “சேலத்தில் இளம்பெண்கள், இளைஞர்களிடம் சரவணன் போன்ற குற்றவாளிகள் கைவரிசை காட்டினாலும் அவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்க முன் வர வேண்டும். அப்படி பாதிக்கப்பட்டால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதன்படி கொண்டலாம்பட்டி சரக உதவி ஆணையர் ஆனந்தியிடம் 9159222580 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரும்புக்கம்பியால் இளம்பெண் அடித்துக்கொலை.. திமுக பிரமுகரின் மகன் வெறிச்செயல்!