பாமக கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிக்கை மனுக்கள் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் , கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்படுகிறது.
மனு அளிப்பு
அந்த வகையில், இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் மாவட்ட பாமக கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. பாமக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.அருள் தலைமையில் சேலம் மாவட்ட பாமகவினர் 500-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்கள், கார்களில் அண்ணா பூங்கா அருகிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு
இது குறித்து இரா.அருள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"அனைத்து சாதி மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆணையாளரிடம் மனு அளித்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
பாமக, வன்னியர் சங்கத்தினர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, நான்கு ரோடு சந்திப்பு, செவ்வாய்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: 8 வழிச்சாலை: உச்ச நீதிமன்றத்தில் பாமக கேவியட் மனு!