சேலம்: மேட்டூரில் இயங்கி வரும் மங்கை கட்பீஸ் கடை உரிமையாளரின் மகன் சதீஷ்குமார். இவர், கடந்த சில ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்தும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறுப் பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு
மத்தியில் உள்ள பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்களையும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதையடுத்து மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் பாமகவினர் சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (ஜூலை12) மேட்டூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, பாஜக மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வேலுவும் சதீஷ்குமாரை கைது செய்ய புகார் அளித்தனர்.
காத்திருப்பு போராட்டம்
சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும், அதுவரை காவல் நிலையம் அருகிலேயே காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக சட்டப்பேரவை உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதாக உறுதி அளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில், பாமக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகர், மேட்டூர் நகர செயலாளர் நைனா சேகர், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் துரை ராஜ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஷோபனா குமரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது - இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை