சேலம்:
உலக கழிவறை தினம் இன்று (நவ.19) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. திறந்த வெளி மலம் கழித்தல் இல்லை என்ற நிலையை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் முயற்சித்துவருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் கைக்கோர்த்துள்ளது.
சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரமான வசிப்பிடம் ஆகியவற்றை பேணும் வகையில் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டும் திட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் செயல்படுத்திவருகிறது.
இந்நிலையில், உலக கழிவறை தினமன்றுகூட எங்களுக்கு முறையான கழிவறை வசதியில்லை என சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் மஜீத் தெரு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “இன்று உலக கழிப்பறை தினம், ஆனாலும் மக்களின் ஒரு பகுதி இன்றளவும் கழிப்பறை வசதி இல்லாமல் திண்டாடும் நிலையுள்ளது.
வீட்டுக்கொரு கழிப்பறை என்று அரசு அறிவித்த பின்னும் தங்களுக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே எங்களுக்கு இருக்கிறது. 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் மக்கள் பயன்படுத்த ஒரே ஒரு மாநகராட்சி கழிப்பறை மட்டுமே உள்ளது. அருகிலுள்ள பெரியார் தெரு மக்களுக்கும் இதே நிலை தான்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரகு கூறியதாவது, “இரவு நேரங்களில் மாநகராட்சி கழிப்பறைகள் இயக்கத்தில் இருப்பதில்லை. இச்சூழ்நிலையில் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மிகவும் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்” என வருத்தம் தெரிவித்தார்.
ஒருவருக்கு உணவு, உடை, இருப்பிடம் எவ்வளவு அவசியமோ அந்தளவு கழிப்பறையும் அவசியம். இதை அரசு கவனத்தில் ஏற்று, அரசு ஆவண செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி :
திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்ற நிலையை எய்தியதற்காக தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அரசின் சிறந்த அளவு நிலையான ஓடிஎஃப் சான்று பெற்றுள்ளது. தற்போது புதிப்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக ஓடிஎஃப் பிளஸ் சான்று பெற விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் அருண் கூறியதாவது, “தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்ற நிலையை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 45 பொது கழிப்பிடங்கள் உள்ளன. முன்பு தனியார் வசமிருந்த இந்த கழிப்பிடங்களை, தற்போது மாநகராட்சி கையிலெடுத்து செயல்படுத்திவருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பதற்காக மத்திய அரசின் சிறந்த அளவு நிலைகளில் ஒன்றான ஓடிஎப் தரச்சான்று பெற்றுள்ளது. தற்போது இதில் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். விரைவில் இப்பணிகள் முடிவுக்குவரும் திறந்த வெளி மலம் கழித்தல் வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு ஒரு நாளில் ஒரு கோரிக்கையாக வைக்கிறோம் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 596 ஆகும். இவற்றில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 227 வீடுகளில் கழிப்பறை வசதியில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் 50 ஆயிரத்து 691 கழிப்பறைகளும், தூய்மை பாரத இயக்கம் மூலம் 86 ஆயிரத்து 536 தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இவற்றுக்கு தலா 12 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. தற்போது மறு கணக்கெடுப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத 21 ஆயிரத்து 52 வீடுகளில் மானியம் மூலம் கழிப்பறை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்ற வருகின்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு மாநகராட்சி பகுதிகளில் தனிநபர் கழிப்பறை இல்லாமல் மாநகராட்சியின் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தனிநபர் இல்ல கழிப்பறைகள் இல்லாத கிராமங்களில் உடனடியாக கழிப்பறைகளை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி :
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டம் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,70,374. இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,26,345. பெண்கள் எண்ணிக்கை 9,44,029. இதில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 15,39,802. கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 3,30,572. குமரி மாவட்டத்தில் மக்களின் அடர்த்தி ஒரு கிலோ மீட்டருக்கு 1119 பேர் எந்தக் கணக்கில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடக்கக்காலத்தில் திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு அதிகளவில் இருந்தது. பின்னர் மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை கட்டிக் கொடுக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களிலும் ஏராளமான கழிப்பறைகள் தேவையான அளவு கட்டிக் கொடுக்கப்பட்டன. இதனால் குமரி மாவட்டம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குமரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'துாய்மை இந்தியா' களப்பணியை துவக்கி வைத்த, அப்போதைய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், கன்னியாகுமரி மாவட்டத்தின், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துவோர், மாவட்டத்தில் இல்லை. இதன் மூலம், தமிழகத்திலேயே, திறந்தவெளி கழிப்பறை இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமையை, கன்னியாகுமரி பெற்றுள்ளது என்று அறிவித்தார்.
எனினும் குமரி மாவட்டத்தில் தற்போது நிலவும் கரோனா காலகட்டத்தில் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமலும், முறையான வகையில் பராமரிக்கப்படாமல் உள்ளன. அதே போல் பொது இடங்கள் சுற்றுலாத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவறைகள் திறக்கப்படாமல் மூடியை காட்சியளிக்கின்றன. இதனால் பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் கழிவறை வசதி இல்லாமல் அவதியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.