சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் 916 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் சூரமங்கலம் மண்டலப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி ஏரியை, 29 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி, பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்தப் பணிகளை சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்,"
பள்ளப்பட்டி ஏரியினை மேம்படுத்தி, பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. 44.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஏரியின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தூர்வாரி ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்து, படகு இல்லம், சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், குழந்தைகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்றுகள், வன விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு பூங்கா அமைத்தல், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடைமேடை, மிதி வண்டி ஓட்டும் தளம், உணவகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு, நவீன சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கப்பட உள்ளது " என்றார்.