சேலம்: அதிமுகவில் நிலவிய ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு தரப்பாக ஆதரவாளர்கள் பிரிந்தனர். தொடர்ந்து இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடினர். ஆனால் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தனக்கு ஆதரவான முடிவுகள் கிடைக்காததால் அப்செட்டான ஓபிஎஸ், மத்தியில் இருக்கும் ஆதரவால் கட்சியை மீண்டும் பிடித்து பிட முடியும் எனக் கருதி வந்தார்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கர்நாடகத்தேர்தலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமுகமாகி தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதனால் மத்தியில் இருந்த ஆதரவின் மீது ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த நம்பிக்கை மங்கிப்போனது.
இதனையடுத்து டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் தன் சமூகத்திற்கு என இருக்கும் வாக்குகளை ஒன்று சேர்ப்பதற்காக, டிடிவி தினகரனுடன் இணைந்தார். மேலும் எதிர்தரப்பு பலமாக உள்ள பகுதிகளில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக கொங்கு பகுதிகளில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி தொண்டர்கள் மத்தியில் தன் பலத்தைக் காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் சார்பில் மாநகர மாவட்டக் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று, ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தின் முன்பு பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 100 அடி தூரத்திற்கு அதிமுக கொடிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் நட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தின் முன்பு குவிந்து, ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் கொடி, சின்னத்தினை பயன்படுத்தக்கூடாது என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் நட்டு வைக்கப்பட்டிருந்த கொடியினையும் பிடுங்கி எறிந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
அப்பொழுது ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அதிமுகவின் கொடியினை பயன்படுத்த அவர்களுக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லை, கட்சி எங்களுடையது என்று கூறி, எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் டவுன் காவல் நிலையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்தனர். அதிமுக கொடி தொடர்பாக ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் சேலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஓபிஎஸ் தரப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபத்தின் முன்பு, 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலோசனைக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனுக்களை வழங்கி உள்ளனர்.
சேலம் மாவட்டம் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் ஓபிஎஸ் தலைமையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், போர்க் கொடி தூக்கி உள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.