சேலம் மூன்று ரோடு பகுதியில் ஆரோக்யா மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை ராணி வரதராஜன் என்பவர் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராணி வரதராஜன், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில், 'சென்ற மே 5 ம் தேதி காலை 11:00 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்தேன். அப்போது சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த முருகன் என்பவர், வந்து, 'நீங்கள் தவறான மருத்துவம் பார்க்குறீங்க.
உங்கள் மருத்துவமனை மீது புகார் வருகிறது. அதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும்.இல்லையெனில், மருத்துவமனை மீது அரசு உயரதிகாரிக்கு புகார் அனுப்பி, மருத்துவ மனைக்கு சீல் வைப்பேன் " என மிரட்டினார்.
ஆனால் நான் மாமூல் தரமுடியாது எனக்கூறியதால், 'நீ வெளியே வந்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' எனக்கூறி மிரட்டி விட்டு சென்றார். என்னை மிரட்டி சென்ற முருகன், அம்மா மக்கள் மாணவ மாணவி மகளிர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய பள்ளப்பட்டி போலீசார், நேற்று, முருகனை கைது செய்தனர். அரசியல் அமைப்பு பிரமுகர் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவ இயக்குனரை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு